12 மார்ச் 2006
இந்த நாளை உலக துடுப்பாட்ட (கிரிக்கெட்) ஆர்வலர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள். கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நாள் அது.
2005-06 இல் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் 2-2 என்கிற வெற்றியின் கணக்கில் இரு அணிகளும் சம பலத்தில் இருந்தன. இறுதிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருந்தன.
இறுதி ஆட்டம் ஜொஹன்னஸ்பர்க் (Johannesburg) நகரத்தில் நடைபெற இருந்தது. அந்த பொன்னான நாளும் விடிந்தது.
இரு அணிகளிடையே யார் முதலில் ஆடுவார்கள் என்று நிர்ணயிக்கும் டாஸ் (Toss) இல் ஆஸ்திரேலியா வென்றது. தங்கள் அணி முதலில் பேர் செய்யப் போவதாக ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) அறிவித்தார். அன்றைய போட்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் சவாலாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க அணித் தலைவர் கிரீம் ஸ்மித் (Graeme Smith) நினைத்திருக்க மாட்டார்.
ஆட்டம் துவங்கியதில் இருந்தே ரன் மழை பொழிந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் சைமன் காதிட்ச் இருவரும் தென்னாப்பிரிக்க வீரர்கள் வீசிய பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டி அடித்தனர்.
15.2 ஒவர்களில் 97 ரன்கள். அப்போது தான் தென்னாப்பிரிக்கா அணியால் தன் முதல் விக்கெட்டைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால், அடுத்து வந்த பாண்டிங் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடினார். கில்கிறிஸ்டே தேவலை போல் இருந்தது.
அபாரமாக ஆடிய பாண்டிங் 164 ரன்களைக் குவித்தார் ( 13 பவுண்டரி, 9 சிக்ஸ்) . இன்று வரை அவர் அடித்த அதிகப்பட்ச ரன்கள் அதுவே!!
ஐம்பது ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 434 ரன்களைச் சேர்த்திருந்தது. அதுவே அப்போதைய அதிகபட்ச ஸ்கோர் ஆகையால், ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து மழை பொழிந்தது.
ஆனால், இந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்க வில்லை.
அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்கா துவக்கத்திலேயே தன் முதல் விக்கெட்டைப் பறி கொடுத்தது. அனைவரும் அவ்வளவு தான் என்று எண்ணிய நேரத்தில் துவக்க ஆட்டக்காரர் கிரீம் ஸ்மித் உடன் கிப்ஸ் இணைந்தார்.
அதகளம் ஆரம்பமானது.
இருவரும் பந்துகளை நாலாபுறமும் சிதற விட்டனர். ஆஸ்திரேலியா நிகழ்த்தியது சுனாமி என்றால், இவர்கள் செய்ததோ தானே புயல். ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதத்தை விட மிக வேகமாக ஸ்கோர் ஏறியது.
22.1 ஓவரில் ஸ்கோர் 190 ஆக இருக்கும் போது ஸ்மித் [90 ரன்]ஆட்டமிழந்தார். என்றாலும், ரன் விகிதம் குறைந்த பாடில்லை.
23 ஓவரிலேயே ஸ்கோர் 200-ஐத் தொட்டது.
கிப்ஸ் ஆஸ்திரேலிய பந்துகளைத் துவம்சம் செய்தார். ஸ்கோர் மளமள வென்று ஏறியது.
32 ஆம் ஓவரில் தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மிகவும் சிறப்பாக விளையாடி வந்த கிப்ஸ் 175 ரன்கள் (21 பவுண்டரி, 7 சிக்ஸ்) எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 299!!
32.2 ஓவரில் 300 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா.
இன்னும் 106 பந்துகளில் 134 ரன்கள் தேவை என்கிற நிலையில், கிப்ஸ் என்கிற சிங்கம் இல்லாததால், தென்னாப்பிரிக்க அணியின் சீற்றம் சற்று தணிந்தது.
கிட்டத்தட்ட 10 ஓவர்கள் கழித்து 41.5 ஆம் ஓவரில் 350 ஐ எட்டியது தென்னாப்பிரிக்கா.
42.2 ஓவரில் ஆறாம் விக்கெட் விழ ஸ்கோர் 355/6 என்று ஆனது.
அதற்குமேல் அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவது கடினம் என்றே பலரும் நினைத்தனர்.
ஆனால், அடுத்து இறங்கிய பேட்ஸ்மேன்கள் (தொழில்முறை பவுலர்கள்) அப்படி நினைக்கவில்லை.
வான் தர் வாத் 20 பந்துகளில் 35 ரன்கள் குவிக்க, அடுத்து இறங்கிய டெலிமாகஸ் 6 பந்துகளில் 12 ரன்கள் குவித்தார். மீண்டும் ரன் மழை பொழியத் துவங்கியது.
46.4 ஓவரில் 400 ஐக் கடந்தது தென்னாப்பிரிக்கா..
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் மார்க் பவுச்சர் சீராக ஆடினார்.
47 ஓவர்கள் முடிந்த போது, 30 ரன்கள் தேவைப்பட்டன. 48 ஓவர்கள் முடிந்த போதோ 13 ரன்களே தேவைப்பட்டன.
49 ஆம் ஓவரில் டெலிமாகஸ் வெளியேற, ஸ்கோர் 428/8 என்றானது. வெற்றி பெற இன்னும் 7 ரன்கள் தேவைப்பட்டன.
இறுதி ஓவர்
பந்து வீச பிரெட் லீ வந்தார்.
முதல் பந்தில் பவுச்சர் ஒரு ரன் எடுத்தார்.. 5 பந்துகளில் 6 தேவை!!
இரண்டாம் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஹால். 4 பந்துகளில் 2 தேவை!!
தென்னாப்பிரிக்கா கொஞ்சம் மூச்சு விட்டது!
ஆனால், அதற்கடுத்த பந்திலேயே ஹால் ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 2 தேவை.
எளிதாய் வெல்லலாம் என்றாலும், ஒரே விக்கெட் மட்டுமே பாக்கி இருந்தது. நட்சத்திர வீரர் பவுச்சரும் எதிர் முனையில் இருந்தார்.
நிட்னி களமிறங்கினார்.
நான்காம் பந்தை வீணாக்காமல் ஒரு ரன் எடுத்து பவுச்சருக்கு வழி விட்டார் நிட்னி. இரு தரப்பும் ஒரே ஸ்கோர்.
அடித்தால் வெற்றி... விழுந்தால் டை (எது என்றாலும் சாதனை!)
"சாதனை புரிய வாய்ப்பு கிட்டுவது மிக கடினம்" என்பதை பவுச்சர் உணர்ந்திருந்தார். எனவே, வரலாற்று சாதனை படைத்த அந்த பந்தை எல்லைக் கோட்டை நீக்கி விளாசினார்.
4 ரன்கள்!!
ஸ்கோர் 438 / 9
தென்னாப்பிரிக்கா வென்று விட்டது!!
ஆஸ்திரேலிய அணியினரால் இதனை நம்ப முடியவில்லை!!

ஆட்டத்தின் ஸ்கோர் போர்ட்: போட்டி 2349
இதுவரை அதிகமாக துரத்தி வெற்றிக் கொள்ளப்பட்ட போட்டி (Highest Run Chase) இது தான்!
போட்டி நடந்த சில காலம் வரை இதுவே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆனால், சில நாட்களிலேயே இலங்கை 453 அடித்து முறியடித்தது. எனினும், அதிகமாக துரத்தி வெற்றி பெற்ற போட்டி இது தான்!!
இது நடந்து 6 ஆண்டுகள் ஆகி விட்டன.
ஆட்ட நாயகனுக்கான கோப்பை பாண்டிங் மற்றும் கிப்ஸ் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், கோப்பையை ஏற்க மறுத்த பாண்டிங் "அன்றைய போட்டியின் விருதைப் பெற கிப்ஸ் தான் தகுதியானவர்" என்று தெரிவித்து போட்டி மாண்பைக் காட்டியது தனிக் கதை!
Humdinger போட்டியைப் போலவே அமைந்ததாக கிரிக் இன்போ கூறியது. (அந்த போட்டியைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்).
சில போட்டிகள் என்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கும். அவற்றுள் ஒன்று இந்த போட்டி.
இந்த போட்டி உணர்த்திய மந்திரம் "விடா முயற்சி; விஸ்வரூப வெற்றி" (அப்பாடா!! பன்ச் சொல்லியாச்சு)!
இந்த சாதனையும் ஒரு நாள் முறியடிக்கப்படலாம்!அதுவரை இதனை யாரும் மறக்க முடியாது!
சாதனைகள் நொறுக்கப்படுவதற்கே!!
போட்டியைக் கண்டு ரசிக்க: சாதனைப் போட்டி
நன்றி: யாஹூ கிரிக்கெட், கிரிக் இன்போ
இந்த செய்தியை அறிந்த நண்பர்கள் பலர். ஆனால், அறியாதவர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
![]() | ![]() | ![]() | ![]() |
மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக
நீங்க என்ன சொல்றீங்க?