22 ஜனவரி 2012
அலுவல் நிமித்தமாக பல நாட்கள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல். ஒரு வழியாய் வேலை முடிந்து திரும்ப தயாரானேன்.
"ரயில் டிக்கெட் பிரிண்ட் எடுத்தாச்சா?" என்று ஒரு சகா கேட்டார்.
"நீங்க எந்த காலத்தில் சார் இருக்கீங்க? இப்ப ரயில்ல போக டிக்கெட் எல்லாம் தேவை இல்லை. உங்க அலைபேசியிலோ, இல்லை மடிக்கணிணியிலோ டிக்கெட் ஸாப்ட் காப்பியைக் காட்டினால் போதும்" என்றேன்.
"இருந்தாலும்.. ஒரு பாதுகாப்பிற்கு!!! "
"உங்களைப் போன்ற ஆட்களால் தான் சார் நாட்டில் மரங்களோட எண்ணிக்கை குறையுது" என்றேன்.
அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை. பின்னே,இதற்கு மேல் யாராவது பேசுவார்களா?
புறநகர் ரயிலில் ஏறி சில நிமிடங்கள் கழித்து தான் முதல் சந்தேகமே வந்தது.
"நாம பாட்டுக்கு வந்துட்டோம். கொஞ்சம் ஊர் சுற்ற வேறு வேண்டி இருக்கே.. மின்னணு சீட்டைக் காட்டி காப்பகத்தில் பொருட்களை வைக்க முடியுமா?"
நம்ம கையில் தான் இணைய வசதியுடன் அலைபேசி இருக்கே.. உடனே, உதவி கேட்டு ட்வீட்டினேன், பேஸ்(புக்)னேன்.. பதில் தான் வந்த பாடில்லை.. முகநூலில் நான் ஏதோ அறிவுப்பூர்வமாக கேட்டு விட்டதாகக் கூறி அந்த நிலைக்கு சில பல "விருப்பங்கள்" (லைக்) வேறு!!
ரயில் நிலையம் வந்தது. 'சரி.. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!!' என்று பொருட்கள் காப்பகத்தை நோக்கி நடந்தேன். பையைத் தீவிரமாக சோதனை எல்லாம் செய்தார்கள். 'இனி எல்லாம் சுபமே!' என்று பயணச்சீட்டின் மென்படியை அலைபேசியில் எடுத்து நீட்டினேன்.
காப்பாளர் "சாரி சார். இங்கு பொருள் வைக்க கண்டிப்பா பிரிண்ட் வேண்டும்" என்றார்.
"ஆனா, ரயிலில் போக இதைக் காட்டினால் போதும் என்று விளம்பரம் செய்றீங்க?"
"கரெக்ட் சார். இதை வைத்து நீங்கள் பயணம் செய்யலாம். ஆனா, இங்க எதையும் வைக்க முடியாது"
'பேசாமல் சகா சொன்னபடி ஒரு அச்சு எடுத்திருக்கலாமோ!' என்று தோன்றியது.
திடீரென மனதில் ஒரு யோசனை தோன்றியது.
'இப்பவும் ஒன்றும் குறைந்து விடவில்லையே!! பக்கத்தில் எங்காவது ஒரு இணையப்பூங்கா (Browsing center) இல்லாமலா இருக்கும்? போய் வருவோம்!!' என்று கிளம்பினேன்..
என் நேரம் ரொம்ப நல்ல நேரமாக இருந்தது. சுற்று வட்டாரத்தில் பூங்காக்களைத் தேடி அலைந்தது தான் மிச்சம்.. சில கடைகள் இருந்தன. ஆனால், என்ன காரணமோ, அனைத்தும் பூட்டி இருந்தன!! (விடுமுறைப் பகலில் என் ஒருவனுக்காக திறந்து வைத்திருப்பார்களா? ). வேறு வழியின்றி, மூட்டை முடிச்சுடன் ஊர் சுற்றினேன்.
பொருள் வாங்கல் எல்லாம் முடித்து விட்டு, கனத்த பையுடன் மீண்டும் ரயில் நிலையம் வந்தேன். காத்திருக்கும் அறையில் அமரலாம் என்றால் மீண்டும் அதே பிரச்சனை. அங்கிருந்த பாட்டி சீட்டைக் காட்டினால் தான் உள்ளே விடுவேன் என்றார். அலைபேசியில் காட்டினால் நாட்டாமை படத்தில் விஜயகுமார் சொல்வது போல 'செல்லாது செல்லாது' என்று அதைச் செல்லாக் காசாக்கி விட்டார்.
ஒரு வழியாக ரயிலும் வந்தது. அதில் ஏறி அமர்ந்தேன்.
இருங்க.. இருங்க.. எங்க கிளம்பிட்டீங்க? இனி தான் மெயின் பிக்சரே இருக்கு!!
ரயில் கிளம்பியது. பயணச்சீட்டு பரிசோதகர் வருகைக்காக காத்திருந்தேன். அவர் பக்கத்து சீட்டுக்காரரிடம் வரும் வரை எல்லாம் சுமூகமாகத் தான் இருந்தது.'அடுத்து நாம தான்!' என்றபடியே அலைபேசியைத் துழாவினேன். திடீரென தான் அது நடந்தது.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை!!
ஆம். அலைபேசி அணைந்து விட்டது (ஸ்விட்ச் ஆப்)!!
'அடப்பாவமே!! இதற்குள் தானே எல்லாமே இருக்கு!' என்ற படியே அவரிடம் "சார். செல் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு! கொஞ்சம் இருங்க!! சார்ஜ் போட்ட பின் எடுத்து காட்டுறேன்" என்றேன்.
அவர் முறைத்த படி "உங்க அடையாள அட்டையைக் காட்டுங்க!" என்றார்.
அடையாள அட்டையைக் காட்டிய பின், சார்ஜில் போட்டால் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சார்ஜ் ஏறவே இல்லை!!! எனக்கோ பதற்றம்.
அவர் "நீங்க எடுத்து வைங்க!! நான் மத்தவங்களையும் பார்த்துட்டு வரேன்!" என்றார்.
பக்கத்தில் இருந்தவர் "டிக்கெட்டை போன்ல வச்சு இருக்கீங்களா இல்லை மெமரி கார்டி வைத்து இருக்கீங்களா?" என்றார்.
"போன்ல தான் இருக்கு சார்" என்றேன்.
"மெமரி கார்ட் என்றால் கூட கழட்டி என் மொபைலில் போட்டு காண்பிக்கலாம்!! சரி. பரவாயில்லை!! உங்க சிம்ல GPRS இருக்கா?"
"இருக்கு!!"
"அப்ப கழட்டுங்க! என் செல்லில் போட்டு முயற்சிப்போம்"
சிம்மை மாற்றி போட்டு வலைக்குள் போனால் "Loading.." என்று வந்து அப்படியே நின்றது.
அவர் "மெய்யாலுமே உங்க சிம்ல GPRS இருக்கா?" என்றார்.
"ஆமா சார்... "
"என்ன கம்பெனி சிம்?"
"****"
"அடடா.. நான் *** ல வச்சுஇருக்கேன்!! செட்டிங்க்ஸ் இருக்காதே!!" என்றார்.
அருகில் இருந்த மற்றொருவர் "கவலைப்படாதீங்க!! என்கிட்ட **** மொபைல் இருக்கு!! இப்ப உடனே எடுத்து காட்டிரலாம்" என்று தன் அலைபேசியைத் துழாவினார்.

எனக்குத் தெய்வமே உதவியது போல இருந்தது!!
நேரே IRCTC தளம் சென்றோம். அங்கு எனது பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் உள்ளிட்டால்..............
மீண்டும் விளையாடியது விதி!! தளம் திறக்கவில்லை..
ஆனாலும், அவர் சமயோசிதமாக "டிக்கெட் காப்பி உங்க மெயிலுக்கு வந்திருக்குமே!! அதைத் திறப்போம்!!" என்றார்.
வேறு வழி தோன்றாததால், சரி என்றேன்..
"சார்.. வீட்டிற்குப் போன பிறகு உங்க பாஸ்வேர்டை மாத்திக்குங்க!!" என்றார்.
"சரிங்க.." என்ற படியே அவரது அலைபேசி மூலம் அஞ்சலிற்குள் நுழைந்தேன். நுழைந்து சீட்டு இருக்கும் அஞ்சல் வரை எடுத்தாகி விட்டது. கீழே உருட்டினால், சீட்டு விபரம்!!
திரும்பவும் துவங்கியது அதகளம்...ச்
இடையறாமல் இருந்த இணைப்பு பிரச்சனைகளாலோ (Signal problem) என்னவோ, அவரது அலைபேசி நின்று விட்டது (Hanged).
அவர் சற்று வருத்தத்துடன் "சாரி சார்.. இன்னிக்கு உங்க நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். " என்ற படியே தனது அலைபேசியை மீண்டும் துவக்கினார். சிறிது நேரச் சிந்தனைக்குப் பின், "ஒரு ஐடியா!! யாரையாவது டிக்கெட்டை MMS பண்ண சொல்லுங்க!!! காட்டிடலாம்" என்றார்.
இது நல்லதாகப் படவே, உடனே எனது நண்பன் ஒருவனை அழைத்தேன். அழைத்து விடயத்தைச் சொல்லி உடனே அனுப்ப சொன்னேன். அவன் ஒன்றும் தெரியாதவன் போல "மச்சான்!! உன் பாஸ்வேர்டு சொல்லுடா" என்றான்.
அடிக்கடி பயன்படுத்துபவன் இப்படி கேட்டால் எப்படி இருக்கும்?வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னேன்.. கொஞ்ச நேரம் கழித்து "சரி.. எப்படி MMS அனுப்புறது? " என்ற கேள்வி வந்தது. வழியை விளக்கியும் ஒன்றும் வரவில்லை. கடைசியில் "சாரி.. முடியல" என்று பதில் வந்தது!!
ரயில் செங்கல்பட்டைத் தாண்டி விட்டது. ஏற்கனவே, இரண்டு மூன்று முறை பரிசோதகரைச் சமாளித்தாயிற்று. வேறு வழியின்றி, பரிசோதகரிடம் சரணடைந்தேன்.
"அந்த பாயின்ட்ல வரலைன்னா என்ன? வேற பாயின்ட்ல போடலாம்ல?"
"போட்டுப் பார்த்தாச்சு சார். இது போன் பிராப்ளம் மாதிரி தெரியுது!"
"என்ன தம்பி நீங்க.. படிச்சவரா வேற இருக்கீங்க!! ம்.. மதுரை வரை நான் இருப்பேன். அதுக்கு மேல என்ன செய்வீங்க?"
" நான் வேண்டும்னா பைன் கட்டிடறேன் சார்"
"சரி.. ரெடியா இருங்க!! வரேன்!" என்ற படியே பையை எடுக்கப் போனார்.
பக்கத்தில் இருந்த நண்பர் "சரி.. எதுக்கும் இன்னொரு தடவை உங்க போனைச் சார்ஜ்ல போட்டுப் பாருங்க!!" என்றார். நம்பிக்கையின்றி போட்டேன்..
அலைபேசி கண் சிமிட்டி பல்லிளித்தது!!
எனக்கு மூச்சே வந்தது போலிருந்தது.
அதன் பிறகு, பரிசோதகரிடம் (TTE) போய் அசடு வந்த படியே பயணச்சீட்டின் மென்படியைக் காட்டியது தனிக்கதை!!!
அறிவுரை சொன்ன சகா கனவில் வந்து சிரித்தது வேறு கதை!!
அன்று நான் கற்ற பாடங்கள்:
* பயணம் செய்ய மட்டுமே மின்னணுச்சீட்டு; தங்கவோ, பொருள் வைக்கவோ பயன்படாது
* கூடியவரை சேமிப்புகள் நினைவகச்சில்லில் (Memory Card) வைப்பது நல்லது
* கிழிந்த அரை காகிதத்திலாவது சீட்டை வைத்துக் கொள்ளுதல் நலம்
* குறைந்தபட்சம் பயண எண்ணைக் (PNR Number) குறித்து வைத்துக் கொள்ளல் மிகவும் நன்று
எப்படி நம்ம பல்பு?
இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
கதை பக்கத்துல சொல்லிட்டேன் பாஸ்.
பதிலளிநீக்குபயண அனுபவம் அருமை ....அப்படியே விழிப்புணர்வ சொல்லிடீங்க...நன்றி
பதிலளிநீக்குபிரபல பதிவர்.....அப்படின்னா ....?
பதிலளிநீக்குகற்ற பாடங்கள் எல்லோருக்கும் பயன் தருபவை. தேவையான பதிவு.
பதிலளிநீக்குசார் இது பல்பு இல்லை...
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாடம்...
பகிர்வுக்கு நன்றி...
என் தளத்தில் உங்களின் பின்னூட்டமே இல்லையே என்று பார்த்தேன். ரொம்ப நாள் கழித்து வந்து இப்படி ஒரு பல்ப்-பா? மரங்களின் எண்ணிக்கை இப்படித் தான் குறையுதா? ஹ ஹா... பயண அனுபவம் சோதனை மேல் சோதனை போலிருக்கு ! முடிவில் நல்ல ஆலோசனைகள் ! பிரபல பதிவரான உங்களுக்கு வாழ்த்துக்கள் ! நன்றி சார் !
பதிலளிநீக்குநான் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் PNR number மட்டும் சொல்லி clock room-ல் 3 மாதஙகளுக்கு முன்னர் பெட்டியை வைத்துள்ளேன்.
பதிலளிநீக்குபெரும்பாலான TTE இப்போதெல்லாம் PNR number மட்டும் தான் கேட்கிறார்கள். எனவே PNR number மட்டும் நியாபகம் வைதிருந்தாலோ அல்லது வேறு எதிலாவது குறித்து வைத்திருந்தால் போதுமானது.
பதிவைப் படித்து கருத்து கூறிய மணிகண்டன் , கோவை நேரம் , Advocate P.R.Jayarajan, தமிழ்வாசி பிரகாஷ் , திண்டுக்கல் தனபாலன் , மற்றும் Suresh S R ஆகியோருக்கு நன்றிகள் பல!
பதிலளிநீக்கு@Suresh S R
பதிலளிநீக்குஎழும்பூரில் Mobile ticket ஐக் காட்டினேன்..(அதில் கொட்டை எழுத்தில் PNR உண்டு) வைக்க விடவில்லை..
PNR நினைவில் இல்லாததாலேயே ரயிலில் எனக்கு பல்பு கிடைத்ததை உணர்கிறேன். எனவே, அதனையும் தற்போது பாடங்களில் சேர்த்துள்ளேன்!
@திண்டுக்கல் தனபாலன்
பதிலளிநீக்குஇதே போன்ற/ இதை விட சோதனைகள் உண்டு.. சமயம் கிடைக்கும் போது சொல்கிறேன்!
நல்ல அனுபவம்.
பதிலளிநீக்குஅன்பின் அருண் பழனியப்பன் - ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது - ஐஆர்சிடிசிக்கு ஒரு மடல் தட்டுங்க - ஏதாச்சும் செஞ்சாலும் செய்வாங்க - பிரிண்ட் அவுட் தாங்க சரியான சான்று - பகிர்வினிற்கு நன்றி நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு@பழனி.கந்தசாமி நன்றி ஐயா!!
பதிலளிநீக்கு@veedu
பதிலளிநீக்குவலைச்சரத்தில் மீண்டும் என் பதிவா?
மிக்க நன்றி சுரேஷ் சார்!
@cheena (சீனா)
பதிலளிநீக்குநன்றி ஐயா...
அதைச் செய்துள்ளேன். அவர்கள் பதிலிற்காக காத்திருக்கிறேன்!
நான் எங்காவது போகும் போது இரண்டு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்கிறேன். என்ன ஒன்று இரவு தூங்கும் போது மரம் வந்து பயமுறுத்தும்....
பதிலளிநீக்கு