இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா???
தொடர்ந்து படியுங்கள்.....
அக்டோபர் 2011
இந்த மாதத்தை இன்றைய நவீன உலகில் பலரும் மறக்க மாட்டர்.
காரணம், இந்த மாதத்தின் 5 ஆம் நாள் அன்று தான் (5 அக்டோபர் 2011) ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.
அவரது மறைவிற்கு பல தொழில்நுட்ப நிபுணர்களும், ஊடகங்களும் பல்வேறு வகைகளில் இரங்கல் தெரிவித்துஅவரை வணங்கின.
ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் ஒரு பிதாமகர் என்பதில் எந்த இரு வேறு கருத்துக்கும் இடம் இல்லை..
அதன் பிறகு, சில நாட்களிலேயே கணிணித்துறையின் மிகப்பெரும் பிதாமகர் ஒருவரும் இயற்கை எய்தினார். ஆனால் அவரை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. சில ஊடகங்கள் சிறு பத்தியில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டுத் தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து விட்டன.
அவர் ...............
கணித்தல் துறையின் தந்தை தென்னிசு இரிட்சி
அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?
அதற்கு முன்பு C மொழியைப் பற்றிப் பார்ப்போம்!!
இன்று பல கணிணி பயன்பாடுகள் இயங்க அடித்தளமாக இருக்கும் நிரலாக்க மொழி (Programming Language) C.
1969 - 1973 காலத்தில் பெல் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட மொழி தான் C. அன்று இருந்த பொறி மொழிகளுக்கு (Assembly Language) மாற்றாக அமைப்பு மொழியாக (System Language) C மொழி எழுதப்பட்டிருந்தது. அதுவே, அது மிகவும் பிரபலமாக காரணமாக அமைந்தது.
அமைப்பு மென்பொருளுக்காக எழுதப்பட்டாலும், இன்று பயன்பாடு மென்பொருட்கள் எழுதவும் C மிகையாக பயன்படுத்தப்படுகிறது.
C மொழியைப் பின்பற்றி C++, C# என்று பல மொழிகள் வந்துவிட்டாலும், அன்றும் இன்றும் என்றும் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழி C தான். அந்த மொழியின் மொழிமாற்றி நிரல்களில் இல்லாத கட்டமைப்புகள் மிக சிலவே!!!
இத்துணை சிறப்பு மிக்க C மொழியை உருவாக்கிய பிதாமகர் தான் தென்னிசு இரிட்சி (Dennis Ritchie).
1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் நியுயார்க் நகரில் பிறந்த தென்னிசு அவர்கள், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் ஆகிய இரண்டிலும் பட்டம் பெற்றவர். 1969 ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தில் (AT&T Bell Laboratories) பணிக்குச் சேர்ந்தார்.
அன்று பெல் ஆய்வகங்களும், MIT ( Massachusetts Institute of Technology) பல்கலைக்கழகமும் சேர்ந்து ஒரு பல்நோக்கு இயங்கு தளத்தை உருவாக்க முயன்று தோற்றன.
கைவிடப்பட்ட அந்த திட்டத்தைக் கையில் எடுத்தனர் தென்னிசு இரிட்ச்சியும், அவர் நண்பர் கென் தாம்ஸனும். அந்த திட்டம் நிச்சயம் பிற்காலத்தில் மிகப்பெரும் திட்டமாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து.
அதுவே 1973 ஆம் ஆண்டு UNIX என்கிற இயங்குதளமாக வெளிவந்தது.
தென்னிசு UNIX இயங்குதளத்தின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்.
UNIX உருவாக்கப்பட்ட புதிதில், அது பொறிமொழிகளின் அடிப்படையிலேயே எழுதப்பட்டு இருந்தது. ஆனால்,கணிணி மொழி அனைவராலும் எழுதப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று தென்னிசு நினைத்தார். அதன் விளைவாக உருவானது தான் C மொழி.
1973 ஆம் ஆண்டில் UNIX இயங்குதளம் C மொழியில் மீண்டும் எழுதப்பட்டது.
C மொழியின் குறைகளைக் கண்டறிந்து சில மாற்றங்கள் செய்து அதனை ஒரு மாபெரும் கணித மொழியாக மாற்றிய பெருமை அவரையே சாரும்.
மனிதன் கணிணியுடன் எளிமையாய் பேச C மொழியை உருவாக்கிய தென்னிசு அவர்கள் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள், தனது 70 ஆவது அகவையில், விண்ணுலகுடன் பேச சென்றார்.
ஆனால், அவர் மறைவையே பலர் அறியவில்லை. அறிந்தவர்களில் சிலரும் அதனைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை... சிலர் தன் பங்கிற்காக சிறு இரங்கல் மடல் வாசித்து திருப்தி அடைந்து விட்டனர்.வெகு சிலரே அவருக்கு உண்மையாக அஞ்சலி செலுத்தினர்.
தென்னிசு இட்ட அடித்தளத்தில் தான் இன்று கணிணி உலகமே காலூன்றி நிற்கிறது..
நாம் இன்று கணிணி முன் அமர்ந்து உரையாடமுக்கிய காரணக்கர்த்தாக்களில்
ஒருவர் அவர் .
அடித்தளம் இட்டவரைப் பலரும் மறந்தது மிகவும் வருத்தம் தருகிறது.
காலம் தாழ்த்தி என்றாலும் பரவாயில்லை...
நன்றி: விக்கிபீடியா (தென்னிசு இரிட்சி - ஆங்கிலம்)
அவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவரின் அடிச்சுவடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி ராஜ்குமார்!
பதிலளிநீக்கு