சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதை...
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்விற்குச் சில நாட்கள் முன்னர்..
அன்று தான் பள்ளியில் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு கொடுத்து இருந்தனர்.. பயபக்தியோடு என் அப்பாவிடம் கொடுத்தேன்...
"பரிட்சை ஹால் டிக்கெட்டா? நல்லது.. நல்லது... எல்லாரும் இந்த ஞாயிற்றுக் கிழமை நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் வேண்டிகிட்டு வருவோம்"
"இல்லப்பா... ஸ்டடி லீவ் கொஞ்சம் நாள் தான் குடுத்து இருக்காங்க... படிக்கணும்"
"பரவாயில்லைப்பா... நாம் காலையில சீக்கிரமா கிளம்பி போய்ட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்"
"இல்லப்பா.."
"அரை நாள் படிக்கலைனா ஒண்ணும் ஆகாது.. நீ தான் சில நாள் நைட் முழிச்சு படிப்பல? அப்படி படி"
அதற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை...
"அப்பா... இந்த ஞாயிற்றுக் கிழமை சக்திமான் இருக்குப்பா... சக்திமானுக்கும், தன்ராஜ் கில்விஷருக்கும் சண்டைப்பா"
"அதானே பார்த்தேன் என்னடா பையன் படிப்பில ரொம்ப ஆர்வமா இருக்கான்னு... ஏண்டா சாமியை விட சக்திமான் உனக்கு அதிகமா மார்க் வாங்கி குடுத்துடுவாரா? "
"இல்லப்பா.. அது வந்து.."
"அதெல்லாம் கிடையாது.. நாம் எல்லாரும் போறோம்"
முடிந்தது.. எல்லாம் முடிந்தது.. இந்த வாரம் சக்திமானைப் பார்க்க முடியாது!!
நாம் சக்திமானுக்கு டிப்ஸ் குடுக்காமல் போவதினால் சக்திமான் தோற்று விட்டால்??
அய்யய்யோ... இருள் ஆரம்பித்து விடுமே!!!
குலதெய்வம் கோவில் என்றால் சும்மா நினைத்தவுடன் போய் விட முடியாது...
முசிறியில் இருந்து காலை 9 மணிக்கு பேருந்து.. ஏறினால், ஒரு மணி நேரம் பயணம்..
தவறவிட்டால், மதியம் தான் பேருந்து!!!
எப்படியாவது சக்திமானைக் காப்பாற்ற வேண்டும் என்கிற என் ஆசை நிராசையானது..
அன்று நான் படுக்கையில் புரண்டு புரண்டு தூங்குவது போல் நடித்தும் அப்பா எழுப்பி விட்டார்..
ஒரு வழியாக காலை 7.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, முசிறி வந்தாயிற்று..
"அப்பா.. வீட்டுக்குப் போலாம்பா...சக்திமான்.." என்றாள் என் தங்கை (எல்லாம் என் தூண்டுதலால் தான்)
அப்பா முறைத்தார்..
அதற்கப்புறம் எங்கே பேசுவது?
ஒருவழியாக குல தெய்வம் இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்...
கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்ய அனைத்து பொருட்களையும் அம்மாவும் தங்கையும் பரப்ப துவங்கினர்..
கண்களை மூடி சாமி கும்பிட முயன்றேன்..
கண் முன்னே சக்திமான் தான் நின்றார்... கண்னைத் திறந்தால் தலையில் குட்டு விழும் என்பதால், கண்ணை மூடியபடியே நின்றேன்.
"தம்பி.. இந்த பரிட்சையில நல்லா மார்க் வரும்" என்று கூறிக்கொண்டே பூசாரி விபூதியை என் நெற்றியில் இட்டார்..
என் மனதிலோ அன்று சக்திமானுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பதைபதைப்பு!!
ஆனால், என் தங்கையைப் பாராட்ட வேண்டும்...
என்னை விட சிறியவள் ஆனாலும், சிறிது கூட ஆர்ப்பாட்டம் செய்யாமல், கடவுளை வணங்குவதிலேயே குறியாக இருந்தாள்..
என் அப்பாவும் அவளை மெச்சினார் "அந்த பிள்ளையைப் பாருடா. உன்ன விட சின்ன பொண்ணு.. எப்படி நல்ல பிள்ளையா நின்று சாமி கும்பிடறா.. நீயும் இருக்கியே"
ஒரு வழியாக சாமி கும்பிட்ட பின் வெளியே வர தயாரானோம்..
அப்பா அவர்களிடம் விடை பெற்றார்..
எப்படியோ.. திருச்சியை நோக்கி பயணம் மீண்டும் ஆரம்பமானது..
வழியில் தங்கையிடம் "சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?" என்று கேட்டேன்..
அவள் கூறிய பதிலைக் கேட்டு என் அப்பா சற்று அதிர்ந்து தான் போனார்:
"எப்படியாவது சக்திமானைக் காப்பாத்திடுங்கனு வேண்டிகிட்டேன்"
சரி..
அந்த தேர்வில் எத்தனை மதிப்பெண் வாங்கினேன் என்று கேட்கிறீர்களா?
அதையெல்லாம் ஏங்க திரும்பவும் கேட்குறீங்க? போங்க... போங்க...
சக்திமானைக் காப்பாற்றிய பக்திமான் (வேற யாரு உங்க அப்பாதான்)தலைப்பு நல்லாயிருக்குல்ல 10 எபிசோட் ஓட்டலாம்.
பதிலளிநீக்குஇப்படியும் சொல்லலாமோ!!
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...
பதிலளிநீக்குநன்றி நண்பரே!!
பதிலளிநீக்குஉங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும் :-)
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html
இனிய தீபாவள் நல்வாழ்த்துக்கள்